சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தல் விடுத்துள்ளது. 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கத்துவ நாடுகளுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது.
மேலும் குறித்த நாடுகளில் கொரோனா தொற்று எவ்வாறான விதத்தில் பரவுகின்றது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிடுகின்றது.
போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலான வழிகாட்டியொன்றை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி, மிக முக்கியமான இரண்டு கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒரு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும், இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  கிரிக்கெட் சபை குறிப்பிடுகின்றது.