மலையகத்தில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அபரிமித வளர்ச்சி.
     மலையகத்தமிழர் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் பலரின் சுயமுயற்சியால் தோற்றம் பெற்ற ஹைலன்ஸ் கல்லூரி அன்று முதல் இன்றுவரை  நூற்றிருபத்தேழு ஆண்டுகளாக(1892-2019) மலையகக் கல்விக்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றது. நூற்றாண்டு காலமாக இங்கு கல்வி கற்ற மாணவர்கள் பல நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் விண்மீனாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் ஹைலன்ஸ் அன்னை வழங்கிய அதீத சேவையாகும்.  "ஹைலன்ஸ்" என்ற வார்த்தை தேசியம் தாண்டி சர்வதேசத்திலும் பரவி வருகிறதென்றால் இந்த அடையாளத்தின் பின்னே நூற்றுக்கணக்கானோரின் சுயமுயற்சியும், கடின உழைப்பும், வியர்வையும் இருக்கின்றது


      அவ்வகையில் "ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி" எனும் பதத்தின் பின்புலத்தை சுருக்கமாக எடுத்து நோக்கின்,   
ஹட்டன் சிங்கமலை  அடிவாரத்திலே தேயிலைச்செடிகளின் மத்தியிலே அமைந்திருந்தது  மெதடிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயம். அதனருகே 1892ஆம் ஆண்டு ஹட்டன், புகையிரநிலைய அதிகாரியின் ஒரு சிறிய வீடு.அதிலே அவரது மனையாள் தனது வீட்டில் சின்னஞ்சிறார்களுக்கு ஆங்கிலப்பாடம் கற்பித்து வந்தார். அந்த அம்மையார் இட்ட வித்து இன்று ஹட்டன் நகரில் பாரிய விருட்சமாய் வளர்ந்து நிற்கிறதென்றால் அது மிகையாகாது.  
சிறார்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தாலும் பெற்றோரின் உதவியாலும் ஆங்கிலேயர் இடமளிக்க, தற்போதைய ஹட்டன், ஸ்ரீபாத கல்லூரியின் அருகில் அமைந்துள்ள வழிபாட்டுத்தலமான மெதடிஸ்ட் தேவாலயத்தில் மெதடிஸ்ட்மிஷன் பாடசாலையாக முதற்பரிணாமமெடுத்தது. காலப்போக்கில் மாணவர் தொகை மேலும் அதிகரிக்கவே 1910 ஆம் ஆண்டில் மெதடிஸ்ட்மிஷன் வணக்கத்துக்குரிய ஆர்.எஸ்.பீடி என்பவரின் தலைமையில் இப்பாடசாலையை தம்  பொறுப்பில் ஏற்றுக்கொண்டது. அதன்பின் வணக்கத்துக்குரிய போதகர் "கோனிஸ்" என்பவரும் இன்னும் சிலரும் தனியான பாடசாலையை அமைக்க திருச்சபையிடம் கோரி தற்போதைய ஹைலன்ஸ் கல்லாரியின் அமைவிடத்தை வாங்கி ஒரு கட்டடத்தை எழுப்பினர்.(தற்போது உடைக்கப்பட்ட கோனிஸ் மண்டபம்). அப்பாடசாலைக்கு "வெஸ்லிமிஷன்" ஆண்கள் பாடசாலை எனப் பெயருமிட்டனர். இதுவே ஹட்டன் நகரில் முதன்முதலில் தோன்றிய ஒரே பாடசாலையாகும்

அச்சமயம் இப்பாடசாலைக்கு வேண்டிய நிதியானது ஐக்கிய ராச்சியத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றதுஇராப்பகலாக ஆசிரியர்கள் ஆற்றிய சேவையின் நிமித்தம் 1928 இல் மேலும் மாணவர் தொகை அதிகரிக்க, இடவசதி மேலும் தேவைப்பட்டது. அச்சமயம் வணக்கத்துக்குரிய போதகர் "தோப்" என்பவர் ஒரு கட்டிடத்தை அமைத்தார். அது "தோப்" மண்டபம் எனப்பெயரிடப்பட்டது. இந்த வெஸ்லிமிஷன் பாடசாலையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகியோர் சாதி, மத பேதமின்றி கூடிக்குலாவி கல்வி கற்ற காலம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.  

     1921இல் "வெஸ்லிமிஷன் ஆண்கள் பாடசாலை"-"வெஸ்லிமிஷன் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. முதலில் ஆரம்பப்பாடசாலை விடுகைப்பத்திரம் வரை கல்வி போதிக்கப்பட்டது. பின் மாணவர் தொகை அதிகரிப்பால் கனிஷ்ட பாடசாலை விடுகைப்பத்திரம் வரை தரமுயர்த்தப்பட்டது. அதன் பின்னரே அரச பரீட்சைகள் அரங்கேறின.1939-11-30 ஆம் திகதி அக்கால கிறிஸ்தவ மத போதகர் தன் மகளை இப்பாடசாலையில் சேர்த்து "மெதடிஸ்ட் தமிழ்-சிங்கள கலவன் பாடசாலை" எனப்  பெயர்மாற்றம் செய்தார். அதன் பின்தான் பெண்பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 1941-01-27 இல் ஆறு வகுப்புக்களைக் கொண்ட நெல்சன் மண்டபம் அமைக்கப்பட்டது. 1941-07-01 இல் சிரேஷ்ட பாடசாலை  விடுகைப்பத்திரம் வரை கல்வித்தரம் மேலும் உயர்த்தப்பட்டது.  
அதன்பின்னர், 1942இல் தான் இப்பாடசாலை "ஹைலன்ஸ் கல்லூரி" எனப்பெயர் பெற்றது.  (High-உயர், land-நிலம்) உயர்ந்த நிலப்பகுதியில் இப்பாடசாலை அமையப்பெற்றதால் ஹைலன்ஸ் கல்லூரி என்பது காரணப்பெயர் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 1945-1946 வரை இது ஆங்கில பாடசாலையாகவே இருந்தது. பின்னர், "ஹைலன்ஸ் மத்திய கல்லூரி" என்று தமிழ்பாடசாலையாக உருப்பெற்று 2006 இல் மீண்டும் தரம் ஆறிற்கு மேல் ஆங்கிலப்பிரிவு  கல்லூரியின் மேற்பிரிவிலே ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையே இன்று மீண்டும் "ஹைலன்ஸ் கல்லூரி" எனப் புகழ்பெற்றுத் திகழ்கிறது.  

     பிற்பட்ட காலங்களில்  விஞ்ஞான ஆய்வுகூடம், தாவரவியல்-விலங்கியல் ஆய்வுகூடங்கள், சிறுவர் விளையாட்டுப்பூங்கா, அதிபர் காரியாலயம், மூன்று மாடிக்கட்டிடம்தகவல் தொழிநுட்பத் தொகுதி, சங்கீத, நடன அறைகள், ஆசிரியர் ஓய்வறை, சிற்றுண்டிச் சாலை, நூலகம், பிரதான மண்டபம், பிள்ளையார் திருக்கோயில் என ஒவ்வொரு கட்டிடமாக எழ ஆரம்பித்து இன்று ஹைலன்ஸ் கல்லூரி கட்டிடச் சங்கமமாக உயர்ந்திருக்கிறதென்றால் இதற்கு வித்திட்ட உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. இதுதான் எமது கல்லூரி பெயர் பெற்ற வரலாற்றின் நூற்றில் சுமார்  ஐந்து வீதம்.  


     நூற்றாண்டு கடந்த எமது ஹைலன்ஸ் கல்லூரியில் சேவையாற்றிய நூற்றுக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் மட்டுமல்ல, அக்கால மதப்போதகர்கள், பெற்றோர்கள், அரும்பணியாற்றிய சான்றோர்கள், பழைய மாணவர்கள், நகர வர்த்தகர்கள்உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரதும் குருதி ஹைலன்ஸ் கல்லூரியின் வரலாற்றில் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிபர்கள் என்று அடையாளப்படுத்துகையில் திரு. சேம் சீவரட்ணம், திரு. டி. எஸ். மெண்டிஸ், திரு. சேம் தம்பாபிள்ளை, திரு. . மெண்டிஸ், திரு. எஸ். சீ. ஜெயசிங், திரு. பீ. எப். செபஸ்டியன், திரு. இரா. சிவலிங்கம், திரு. சீ. சந்திரசேகரம், திரு. எஸ். திருச்செந்தூரன், திரு. எஸ். கிருஷ்ணன், திருமதி. செல்லம் சிவசிதம்பரம், திரு. வீ. நம்பியையா, திரு. என். பாலசுந்தரம், திரு. கே. மெய்யநாதன், திரு. கே. பீ. மாயாவுதாரம், திரு. . எஸ். குமார், திரு. எஸ். விஜயசிங் என்போரின் சேவை வார்த்தைகளால் அளவிட முடியாததொன்றாகும். இவர்களைத் தொடர்ந்து தற்போது திரு. இரா. ஸ்ரீதர் அவர்கள் அதிபர் பதவியில் சிறப்பாகக் கடமையாற்றி வருகின்றார்.

     இன்று சமூக வலைதளங்களிலே தத்தம் கணக்குகளின் முகப்புகளில் "Highlander", "Proud to be a Highlander", "Went to Highlands College", "We are Highlanders,We are always No.1" ஆகிய சொற்பதங்களை நாம் பெருமிதத்துடன் தட்டச்சிட்டு காட்சிப்படுத்துகின்றோமென்றால் அப்பெருமிதத்தின் பின்னே அந்த பெயருக்கான பலரது உழைப்பும் நூறு சதவீதம் இருக்கின்றது என்பதே நிதர்சனம். அன்று ஹைலன்ஸ் கல்லூரியின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தலா ஐம்பது ரூபாய் வழங்கியுதவிய பெற்றோர்கள் இன்று தலா நூறாயிரம் ரூபாய் வழங்குகின்றனர் என்பது கண்கூடு. இத்தனை பேர் உழைப்பில் பெற்றுக்கொண்ட பெயரினை ஹைலன்ஸ் அன்னையின் குழந்தைகளாகிய நாம் வெறுமனே பெருமைக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளாமல்  உறுதுணையாகவும் இருக்க வேண்டும். வருடாவருடம் மறக்காமல் எங்கேனும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்வது இப்போதெல்லாம் கலாசாரமாகி வருகிறது. ஒன்றுகூடல் எனும் பெயரில் கேக் வெட்டி ஆட்டமும் பாட்டமுமாய் உண்டு களித்து பணமெனும் தாள்களின் பெறுமதியை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டு செல்வதைத் தவிர்த்து   கல்லூரிக்காக நேரம் ஒதுக்கி கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்

     இனிவரும் காலங்களிலாவது வருடம் ஒரு நாளேனும் கல்லூரிக்கு வருகைத்தந்து எமது அநுபவங்களை எதிர்கால தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வோம், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்த எம்மால் இயன்ற முயற்சிகளை எடுப்போம்கல்லூரிக்காக எம்மால் இயன்ற உதவிகளை செய்வோம், நம்மை வாழ்வில் உயர்த்தி, நம் வாழ்வையும் உயர்த்திய நமது பாடசாலைக்காக சிறிது நேரத்தை ஒதுக்கி எமது கல்லூரியின் அதீத வளர்ச்சியில் நாமும் பங்காளர்களாவோம் என உறுதிபூணுவோம்.  

தொகுப்பு
-ஹட்டன் பிரவீனா