Saturday, May 30, 2020

உலக சுகாதார நிறுவனம் (WHO), கொவிட்- 19 தொற்றுக்கு எதிராக திறம்பட செயற்படவில்லை. அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு.


கொவிட் - 19 வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாளிகளாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவை தண்டிக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய டிரம்ப், "உலக சுகாதார நிறுவனம் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 
மேலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்காவினால் அளிக்கப்பட்டு வரும் நிதியினை மற்ற அமைப்புகளுக்கு வழங்க போவதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டொலர்களுக்கு மேல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படவில்லை என உள்நாட்டிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், டிரம்போ நோய்த்தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
கொவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 1,02,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் அவர் கூறுகையில் உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை துண்டித்துவிட்டு, அந்த நிதியை மற்ற உலகளாவிய பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளோம்" என வெள்ளை மாளிகையில் வைத்து தெரிவித்திருந்தார். 
"சீன அரசாங்கத்தின் தவறான செயலின் காரணமாகவே உலகம் இப்போது பாதிக்கப்படுள்ளது" என்றும் அவர் கூறினார்.
சீனாவே "உலகளாவிய பெருந்தொற்றை பரப்பியது. இதன் விளைவாகவே அமெரிக்கா ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் "உலகத்தை தவறாக வழிநடத்த" உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா அழுத்தம் கொடுப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
கொரோனா வைரஸ் பரவலை கையாள்வது பற்றி உலக சுகாதார நிறுவனத்தை முதல் முறையாக கடந்த மாதம் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் "அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றது" என்றும் கூறிய டிரம்ப், அதற்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தினார்.
"கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் நீங்களும் உங்களது நிறுவனமும் தொடர்ச்சியாக தவறான நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக தற்போது உலக நாடுகள் பெரும் விலையை கொடுத்து வருகின்றன" என்று கடந்த மே 18ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு எழுதிய கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
"சீனாவின் கைப்பாவையாக" உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!